கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 5 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஆண்டு தோறும் பெரும் லாபத்தை ஈட்டும் திரையுலகம் முற்றிலும் முடங்கியது. மீண்டும் திரையரங்குகள் எப்பொழுது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் நூற்றுக்கணக்கான படங்கள் வெளியாகாமல் முடங்கியுள்ளன. சில பட தயாரிப்பாளர்கள் வேறு வழி இல்லாமல் படத்தை டிஜிட்டல் தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இருப்பினும் அவை திரையரங்குகளில் பார்ப்பது போன்ற அனுபவத்தை தரவில்லை என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது. இதனையடுத்து மல்டிப்ளக்ஸ் உரிமையாளர்கள் மற்றும் மத்திய அரசுக்கு இடையே முக்கிய மீட்டிங் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து தியேட்டர் திறக்கப்படுவது குறித்து பேசிய தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ, “தியேட்டர்கள் எப்போது திறக்கலாம் என மத்திய அரசு செப்டம்பர் 1 ஆம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளதாகவும், ஆலோசனையில் மத்திய அரசு என்ன வழிகாட்டுதல் சொல்கிறதோ அதன்படி தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கப்படும்” என்றும் கூறினார்.