ஐந்து மாதங்களுக்கு பிறகு சினிமா படப்பிடிப்புகளை தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்த இயக்குனர் சேரன், ஒரு வேண்டுகோளையும் வைத்துள்ளார்.

கொரோனா வைரஸ் ஊரடங்கின் காரணமாக, கடந்த 5 மாதங்களுக்கு மேலாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளன. மேலும் சினிமா படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் சினிமாத்துறை சார்ந்த வியாபாரங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தற்போது சீனா, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில், சமூக இடைவெளியை கடைபிடித்து, சினிமா தியேட்டர்கள் மற்றும் படப்பிடிப்புகள் தொடங்கி இருக்கின்றன.

இதே நிலையை இந்தியாவிலும் கடைப்பிடிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்காக சில வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இயக்குனர் சேரன் தனது சமூக வலைத்தளத்தில் தமிழக அரசுக்கு மேலும் ஒரு கோரிக்கை வைத்துள்ளார். ‘திரைத்துறை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதையும், 70% சிறுபடத்தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள் என்பதையும் கருத்தில்கொண்டு படப்பிடிப்பின் அனுமதிக்கான செலவுகளையும், வரிச்சலுகைகளையும் நிலமை சீராகும் வரை முற்றிலுமாக நீக்கித்தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.