டெல்லி : ம.பி.,யின் இந்தூர் நகரம் தொடர்ந்து நான்காவது முறையாக இந்தியாவின் தூய்மையான நகரமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மத்திய ஹவுசிங் மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஸ்வச் சரவேஷன்தான் விருது வழங்கிப் பாராட்டி உள்ளார்.

இந்தூரைத் தொடர்ந்து சூரத் இரண்டாமிடத்தையும், நவி மும்பை மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது. இதற்காக குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கும், நகராட்சி அதிகாரிகளுக்கும், இதேபோல் நவி மும்பை நகராட்சிக்கும் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பிரதமர் மோடியால் 2016 ஆம் ஆண்டு ''ஸ்வச் சர்வேஷன்'' திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. உலகிலேயே மிகப்பெரிய ஆய்வு ''ஸ்வச் சர்வேஷன்'' தான். இதில் 4242 நகரங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது . நாட்டில் 1.9 கோடி பேரிடம் இதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக புள்ளி விவரங்கள் உள்ளது. 2016 ஆம் ஆண்டு தூய்மைகான நகரமாக மைசூர் தேர்வு செய்யப்பட்டு இருந்தது. இதை அடுத்து 2017, 2018, 2019 மற்றும் நடப்பு ஆண்டான 2020லும் இந்தூர் நகரம் முதலிடத்தை பெற்றுள்ளது பாராட்டுக்குரியது.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது ட்விட்டர் பக்கத்தில் " நாட்டிலேயே தூய்மையான நகரங்கள் பட்டியலில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக இந்தூர் முதலிடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நகரத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள தங்களை அர்ப்பணித்துக் கொண்ட மக்களுக்கும் ஊழியர்களுக்கும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அவர்களுக்கும் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்", என்று பதிவிட்டுள்ளார்.