இந்தியா முழுவதும் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படங்களில் ஒன்று மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’. மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவு படமான இதை நிறைய தடைகளுக்கு பிறகு தற்போது உருவாக்கி வருகிறார்.

இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்திருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரங்கு மணிரத்னத்தின் கனவிற்கு மீண்டும் தடையாகியது. மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நடத்த முடியால் கவலைப்பட்டு வந்த மணிரத்னத்திற்கு கலை இயக்குனர் ஒருவர் ஆலோசனை கூற சென்னை ஐஐடி வளாகத்தில் இந்த படத்திற்கான செட் அமைக்கும் பணி தீவிரமாக நடைப்பெற்று வந்தது. ஆனால் திடீரென பொன்னியின் செல்வன் படத்திற்கான வேலைகளை நிறுத்தும் படி தனது குழுவினர்களுக்கு மணிரத்னம் உத்தரவிட்டார். இதற்கான காரணம் என்ன என்பது பற்றி தற்போது செய்தி கிடைத்துள்ளது, மத்திய பிரதேசத்தில் கதைக்கு தகுந்த ஒரு இடத்தை மணிரத்னம் தேர்ந்தெடுத்துவிட்டார். அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் முதல் அங்கு துவங்கவுள்ளது என்பதை படத்தில் நடிக்கும் நடிகர் நிழல்கள் ரவி கூறியுள்ளார்.

கோலிவுட்டின் முக்கிய நட்சத்திரங்களான விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, த்ரிஷா மற்றும் ஐஷ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதுவரை எந்த நடிகரின் லுக்கும் வெளியாகவில்லை, ஒரே ஒரு போஸ்டர் மட்டும் தான் வெளியாகியுள்ளது. விரைவில் மற்ற அப்டேட்கள் வெளியாகும் என்கிற எதிர்ப்பார்போடு காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.