தென்னிந்திய தொலைக்காட்சி உலகின் ராஜாவாக இருந்து வருகிறது சன் தொலைக்காட்சி. உச்ச நடிகர்களின் படங்கள் பெரும்பாலும் பெரிய தொகைக்கு விலைப்போவது சன் டிவியில் தான். இப்படி இருக்க சன் நெட்ஒர்க் சில காலங்களுக்கு புதிய படங்களை வாங்கப் போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாம்.

தொலைக்காட்சிகள் சினிமாவுக்கு எதிராக மாறும் என ஒரு காலத்தில் சொல்லப்பட்டது. ஆனால், காலப்போக்கில் தொலைக்காட்சிகள் சினிமாவுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதோடு மட்டுமல்லாது கணிசமான வருவாய்க்கும் வழி செய்திருந்தது. தமிழ் சினிமாவில் படங்களுக்கு பட்ஜெட் போடப்படும்போதே சேட்டிலைட் வருவாயைக் கணக்கில் கொண்டே பணம் ஒதுக்கப்படுகிறது.

அப்படி தமிழ் படங்களை நல்ல தொகைக் கொடுத்து வாங்குவதில் முன்னணியில் இருப்பது சன் தொலைக்காட்சி. ஆனால், அவர்கள் இப்போது இன்னும் கொஞ்சம் காலத்துக்கு எந்த புதிய படத்தையும் வாங்கப்போவதில்லை என அறிவித்துள்ளனராம். ஏனென்றால் ஏற்கனவே 36 படங்களுக்கு 150 கோடி ரூபாய்க்கு மேல் முன்பணம் கொடுத்துள்ளனராம். ஆனால் அந்த படங்கள் அவர்கள் கைக்கு கிடைத்தபாடில்லையாம். அதனால் அதிக தொகையை முதலீடு செய்ய விரும்பவில்லையாம் சன் தொலைக்காட்சி.