தமிழகத்தில் திராவிட இயக்கங்களின் மீது தான் தேசிய கட்சிகள் சவாரி செய்ய வேண்டும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது பாஜக ஆதரவின்றி எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என்று எச். ராஜா கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜு தமிழகத்தில் பாஜக இன்னும் வளர வேண்டும் என்று கூறினார். அவர் கூறியதாவது, பொதுவாக பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை வளர வேண்டும். ஏனென்றால், டெல்லிக்கு ராஜாவாக இருக்கிறார்கள், தமிழ்நாட்டை பொருத்தவரை அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியும். எனவே அந்த கட்சியை வளர்த்து எடுப்பதற்கு அவர்கள் கட்சியை முன்னெடுப்பதாக கூறுகிறார்கள். என்றைக்குமே எங்களுடைய செய்தி தொடர்பாளர் சொல்லிவிட்டார் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையில்தான் தேர்தல் நடைபெறும் என்று அவர் கூறினார்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திராவிட இயக்கங்களில் தான் சவாரி செய்ய வேண்டுமே ஒழிய, அகில இந்திய கட்சிகள் எல்லாம் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். பாரதிய ஜனதா கட்சி டெல்லிக்கு ராஜான்னாலும் தமிழ்நாட்டுக்கு குழந்தை மாதிரிதான் என்று அவர் தெரிவித்துள்ளார்.