மலையாள திரையுலகின் முக்கிய நட்சத்திரமான ஃபஹத் ஃபாசில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் ‘சியூ ஸூன்’. ரசிகர்களிடையே பெரும் எதிப்பார்ப்பில் இருக்கும் இந்த படத்தை அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் நேரடியாக வெளியிடுகிறது.

தற்கொலை செய்துக்கொள்ள போவதாக சொல்லிவிட்டு காணாமல் போகும் தன் மனைவியை குடும்பத்தோடு சேர்ந்து தேடும் ஒரு என்ஜினியரின் வாழ்க்கையை மையமாகக்கொண்டு உருவாகியுள்ளது இந்த ‘சியூ ஹூன்’. ஊரடங்கின் போது கட்டுப்படுத்தப்பட்ட ஒரு சூழலில் மொபைல் ஃபோனில் படம் பிடிக்கப்பட்ட திரைப்படம் என்ற தனித்துவச் சிறப்பு இந்தப் படத்துக்கு உள்ளது.

மஹேஷ் நாராயணன் இயக்கத்தில், ஃபஹத் ஃபாசில், ரோஷன் மாத்யூ, தர்ஷனா ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படம் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி அன்று சர்வதேச அளவில் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியாகிறது. இன்னும் சில நாட்களில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், ‘சியூ ஸூன்’ கேரள ரசிகர்களுக்கு இந்த பண்டிகை காலத்தை இன்னும் கொஞ்சம் இனிமையாக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.