கொள்ளையர்கள் தாக்கியதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா அவர்களது மாமா உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரில் இருந்து விலகி நாடு திரும்பியதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதில் சுரேஷ் ரெய்னாவின் மாமா உயிரிழந்ததால் அவர் இந்தியா திரும்பினார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் தரியா என்ற கிராமத்தில் சுரேஷ் ரெய்னாவின் மாமா குடும்பத்தினர் வீட்டு மொட்டை மாடியில் படுத்து தூங்கியுள்ளனர். அப்போது திடீரென அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவர்களை பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் சுரேஷ் ரெய்னாவின் மாமா அசோக் குமார் உயிரிழந்துள்ளார். மேலும் சுரேஷ் ரெய்னாவின் அத்தை ஆஷா தேவி அவரது மகன்கள் அபின், குஷால் உள்ளிட்ட 4 பேர் இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

வீட்டில் இருந்த நகைகள் பணம் திருட பட்டுள்ள நிலையில் அது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உடனடியாக நாடு திரும்பியுள்ளார்.