காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் யார் என்பது தொடர்பாக மூத்த தலைவர்கள் இடையே முரண்பட்ட கருத்து நிலவும் நிலையில் இக்கூட்டம் நடைபெறுகிறது. நாடாளமன்ற தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகியதை அடுத்து இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றுக்கொண்டார். கடந்த ஆறு ஆண்டுகளில் நடந்த பல்வேறு மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு குறிப்பிடும்படியான வெற்றி கிடைக்காததால் மூத்த தலைவர்கள் சிலர் கட்சித் தலைமையின் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடி இருக்கும் சூழலில் கட்சியில் முழுமையான சீர்திருத்தங்களை கொண்டு வருவது அவசியம் என மூத்த தலைவர்கள் சிலரே சோனியா காந்திக்கு கடிதம் எழுதி இருக்கின்றனர். அதே நேரம் கட்சி விவகாரத்தில் சோனியாவையோ ராகுலையோ விமர்சிக்க வில்லை என்றும் கட்சியின் வளர்ச்சிக்கு மாற்றம் அவசியம் என்கின்றனர் மூத்த தலைவர்கள். அதில் கபில் சிபில் சசி தரூர் குலாம் நபி ஆசாத் பிரிதிவிராஜ் சவான் ஆனந்த் சர்மா போன்ற தலைவர்கள் காங்கிரஸ் கட்சியை வழிநடத்த முழுநேர தலைவரை நியமிப்பது அவசியம் என்றும் அப்படிப்பட்ட தலைவரை அனைவரும் ஒருங்கிணைந்து தெரிந்திருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கின்றனர்.

ராகுல் காந்தியோடு நெருக்கமாக இருக்கும் தலைவர்களில் சிலரோ மீண்டும் அவரே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று குரல் எழுப்பி இருக்கின்றனர். அதேநேரம் மூத்த தலைவர்களில் ஒருவரான சல்மான் குர்ஷித் தேர்தல் நடத்தி ஒரு தலைவரை தேர்வு செய்தாலும் சோனியாவும் ராகுலுமே தலைமையாக நீடிப்பார்கள் என்று கூறியுள்ளார். கட்சிக்கு என்று புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டாலும் அவர் ராகுலைத்தான் தனது தலைவராக ஏற்றுக் கொள்வார் என்று அதிருப்தியாளர்களுக்கு பதிலளித்திருக்கிறார் சல்மான் குர்ஷித். இதனால் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பல அதிரடியான முடிவுகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சோனியா காந்தி கட்சியின் தலைவராக வேண்டும் என அக்கட்சியின் மாநில தலைவர் ஆன கே எஸ் அழகிரி விருப்பம் தெரிவித்துள்ளார்.