மறைந்த நாடளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரின் உடல் பொதுமக்கள் அரசியல் தலைவர்களின் அஞ்சலிக்கு பின் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. சென்னையில் தனியார் மருத்துவமனையில் வெள்ளியன்று காலமான வசந்தகுமாரின் உடல் குடும்பத்தினர் விருப்பப்படி சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்திற்கு நள்ளிரவில் கொண்டுசெல்லப்பட்ட அவரது உடலுக்கு காங்கிரஸ் அகில இந்திய பொதுச்செயலாளர் வேணுகோபால் அஞ்சலி செலுத்தினார். தமிழக அரசின் டெல்லி மேலிட பிரதிநிதி தளவாய் சுந்தரம் கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கேரள காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கொடிக்கனுல் சுரேஷ் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த்மூவடனேரே , வர்த்தகர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். கேரளாவைச் சேர்ந்த பொதுமக்களும் இதில் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து குடும்பத்தினர் இறுதி மரியாதை செலுத்திய பின்னர் இறுதி ஊர்வலம் தொடங்கியது. இதில் பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர். வசந்தகுமாரின் பெற்றோரின் நினைவிடம் அமைந்துள்ள தோட்டத்தில் குடும்ப முறைப்படி சடங்குகள் நடத்தப்பட்டன. மகன்கள் வினோத், விஜய் வசந்த் ஆகியோர் சடங்குகளை செய்த பின்னர் வசந்தகுமாரி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.