தேசியக்கொடியை அவமதித்த வழக்கில் மன்னிப்புக் கோரினால் எஸ் வி சேகரை கைது செய்ய மாட்டோம் என சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நடிகரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகருமான எஸ்.வி சேகர் அண்மையில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில் தேசிய கொடிகள் குறித்து சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். அது தொடர்பாக சென்னையை சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் தேசியக் கொடியை அவமதித்ததாக எஸ்.வி சேகர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்தது. அது குறித்து எஸ்.வி சேகரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனு விசாரணைக்கு வந்தபோது தேசியக் கொடியை அவமதித்ததற்காக எஸ்.வி சேகர் மன்னிப்பு கோரினால் அவரைக் கைது செய்ய மாட்டோம் என சென்னை காவல்துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதற்காக எஸ்.வி சேகருக்கு செப்டம்பர் 1 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப் படுவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.