ரீமேக் படங்களாக இயக்கிவந்த இயக்குனர் மோகன் ராஜாவிற்கு நல்லதொரு அங்கிகாரத்தை பெற்றுத் தந்தது ‘தனி ஒருவன்’ படம். தென்னிந்தியா முழுவதும் பெரும் வரவேற்ப்பை பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டு ஓராண்டுக்கும் மேலாகிவிட்டது.

2015-ஆம் ஆண்டு ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி உள்ளிட்டோர் நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் தனி ஒருவன். இந்த படம் வெளியாகி தற்போது 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி மற்றும் அரவிந்த் சாமி ஆகியோரின் நடிப்பு பெரிதும் ரசிக்கப்பட்டது. எத்தனையோ போலீஸ் ஸ்டோரிஸ் பார்த்திருந்தாலும் தனி ஒருவன் தனித்துவமான கதையாகவே மனதில் நின்றிருக்கும். அதற்கு படத்தின் வில்லனாக வந்த அரவிந்த் சாமியின் கேரக்டரே மிக முக்கிய காரணம்.

இந்த படத்தின் 5 ஆண்டுகள் நிறைவடந்ததை தொடர்ந்து படத்தில் நடித்த நடிகர் ஹரிஷ் உத்தமன், இயக்குநர் மோகன் ராஜாவுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டார். மேலும் அவர் ‘தனி ஒருவன்-2’ பற்றியும் கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த மோகன் ராஜா, ''தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு காத்திருக்கும் ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு தகவல், ‘தனி ஒருவன் 2’ பற்றி மாஸ் அப்டேட் விரைவில் வெளியாகும்'' என தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.