பிகில் படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மாஸ்டர்’. விஜய்யின் 64வது படமான இதை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இதில் விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார், படப்பிடிப்பு வேலைகள் முடிந்து போஸ்ட் ப்ரோடக்‌ஷன் வேலைகளும் இறுதி கட்டத்தில் இருக்கும் நிலையில் கொரோனா பரவல் காரணமாக வேலைகள் நிறுத்தப்பட்டது. ரிலீஸுக்கு தயார் நிலையில் இருக்கும் இந்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் தனது 65வது படத்திற்காக யாருடன் இணைவார் என்ற ஆவல் அதிகரித்திருந்த நிலையில், முருகதாஸ், சுதா கொங்கரா, லோகேஷ் கனகராஜ், அஜய் ஞானமுத்து ஆகியோரின் பெயர்கள் அடிப்பட்டது. இறுதிகாக முருகதாஸ் தான் விஜய்யின் 65வது படத்தை இயக்க உள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஏற்கனவே விஜய் முருகதாஸ் கூட்டணியில் வெளியான கத்தி, துப்பாக்கி, சர்கார் ஆகிய படங்கள் வரவேற்பை பெற்றுள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் முருகதாஸ் இயக்க இருக்கும் இந்த படம் ‘துப்பாக்கி 2’ எனவும் ஆனால், துப்பாக்கி 2 டைட்டில் தயாரிப்பாளர் தாணுவிடம் இருப்பதால் அவர் அதை தர மறுப்பதாகவும் செய்திகள் வெளியாகிருந்தது. அவை அனைத்திற்கும் முருகதாஸ் தற்போது பதிலளித்துள்ளார். "இது எந்தப் படத்தின் தொடர்ச்சியாகவும் இல்லாமல், ஒரு புதிய கதையாகவே இருக்கும். ஒரு படத்தின் தொடர்ச்சி என்பது கதையை மீண்டும் ஒரு வட்டத்துக்குள் போட்டு அடைப்பது மாதிரி தான். சும்மா இணையதளங்களில் தலைப்புக் கொடுக்கப்படவில்லை என்று வருவது எல்லாம் பொய். அதில் எதுவுமே உண்மையில்லை. இதனால் படத்தில் சிக்கல் என்பதெல்லாம் கிடையாது. இது என்ன மாதிரியான படம் என்பது தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து முறைப்படியான அறிவிப்பு வந்தால் தான் சரியாக இருக்கும்." இவ்வாறு ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.